Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

கொங்கு நாட்டின் சிங்கம்

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Oct 26, 2013 12:09 am

 
[You must be registered and logged in to see this image.]

தீரன் சின்னமலை
(பிறப்பு: ஏப். 17)
விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு பிற எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. 1857 ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர்கள் தமிழகத்தின் கட்டபொம்மன், தீரன் சின்னமலை உள்ளிட்டோர். இவர்களில் கொங்கு மண்டலத்தின் கதாநாயகனாகப் போற்றப்படும் தீரன் சின்னமலையின் வீர வரலாறு இளைய தலைமுறையினர் அறிய வேண்டியதாகும்.

தீரன் சின்னமலை (ஏப். 17, 1756 - ஜூலை 31, 1805) , கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர். தமிழகத்தின் மேற்கப் பகுதியான கொங்கு மண்டலத்தில், இப்போதைய திருப்பூர் மாவட்டத்தின் காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப். 17, 1756 அன்று கவுண்டர் குலத்தில் பிறந்தவர். தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப் படுகிறது.


தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.
கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ‘‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப் படை ஒன்றுசேரா வண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக் கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.

சின்னமலையின் கொங்குப்படை, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப். 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை – பட்டாலிக் காட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார்.

ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர்துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். ஆனால், முந்தைய நாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.

அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.


.
1801-இல் ஈரோடு- காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஆடிப் பதினெட்டாம் நாளன்று (ஜூலை 31, 1805 ) அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

அன்னாரது நினைவாக நமது அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது. சின்னமலை ஆட்சி நடத்திய ஓடாநிலையில் அவருக்கு தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை- கிண்டியில் தீரன் சின்னமலை சிலை உள்ளது.

அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போர்ப்படை திரட்டிப் போராடி உயிர் நீத்த மாவீரர் தீரன் சின்னமலை. அவரது நினைவே நமக்கு உத்வேகமும் நல்லாற்றலும் வழங்கும்.



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None