Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

கொங்கு நாடு வரலாறு

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Oct 19, 2013 3:29 pm

 
கொங்கு நாடு வரலாறு

கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு .தேன் பூந்தாது , குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மறுத்த நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள்.
"கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந் 1 ) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும்,"கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார். "கொங்கு முதிர்நறு விழை" (குறிஞ் 83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது.

சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு என்றே நாடுகள் தமிழகத்தில் இருந்தன. பின் தொண்டைநாடு சேர்ந்தது. கொங்கு நாட்டைக் காடு கொடுத்தது நாடு ஆக்கியவன் கரிகாலன். கொங்கு நாட்டு மக்களை வைத்தே காவிரிக்குக் கரை கட்டினான், கல்லணை கட்டினான்.

உலகில் மக்கள் தோன்றிய இடம் இலமோரியாக் கண்டம் என்றனர். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியினர் தமிழர்கள்.உலகில் பாரத நாடு புண்ணிய பூமி. பாரத நாடு பழம் பெரும் பூமி என்றார் பாரதி. கடலை ஆடையாக உடுத்திய பெண்ணிற்கு இந்திய முகம். முகத்தில் தமிழகம் நெற்றிப் பொட்டுத் தமிழகம் என்றார் சுந்தரம் பிள்ளை .
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்றனர். சங்க காலத்தி நாடு என்றே இருந்தன. சோழர் காலத்தில் மண்டலங்கள் ஆயின. கொங்கு மண்டலம் எனப்பட்டது. சோழ மண்டலம், சேர மண்டலம், பாண்டிய மண்டலம் என இருந்தன. சங்க காலத்திலேயே கொங்கு நாடு என்று இது வழங்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கொங்கர் எனப்பட்டனர். கிள்ளி வளவனை கோவூர் கிழார் பாடிய புறம்-373 ஆம்பாட்டில்,
"மைந்தராடிய மயங்கு பெருந்தானைக்
கொங்குபுரம் பெற்ற கொங்குவேந்தே "
என்று பாடினார்.கொங்கு குறுநில மன்னன் ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அண்ணல் யானை எண்ணில் கொங்கர்.
"குடகடல் ஓட்டிய ஞான்றை " (புறம் -130)
என்று பாடினார்.
"பல்யானை செல்செழுகுட்டுவனை ",

பாடலைக் கெளதமனார்
"ஆகெழு கொங்கர் நாடகப்படுத்த"
வெல்கெழுதானை வேருவருதோன்றல் (பதிற் -28)

என்று பாடினர். இதில் குறிப்பிட்ட கொங்கர் தான் கொங்கு வேளாளர்கள் .பெருஞ்சேரல் இரும் பொறையை அரிசில் கிழார் பாடினார். கொங்கர்கள் ஆற்றல் மிக்க படையினர் என்றார்.
"சேண் பரல்முரம்பி ணீர்ம் படைக் கொங்கர்
ஆபரந்தன்ன செலவில்"

கொங்கு வேளாளர்களின் பசுகூட்டங்களைப் போலவே அவர்களின் படைகளும் பரந்திருந்தன என்றார். சங்க காலப் பெருமை பெற்ற கொங்கு நாட்டைப் பிற்காலத்துச் சுந்தரரும் "கொங்குகிற் குறும்பில் குரக்குதளியாய் " எண்டே பாடினார். இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார். கண்ணகி கொங்கு நாட்டின் செல்வியாக, கற்புத் தெய்வமாக உள்ளாள்.கொங்கு நாட்டு வெளிர் பெருமக்கள் வழிபடுவதால் கொங்கச் செல்வி என்றார். கண்ணகியை மாரியம்மனாக கொங்கு நாட்டில் வழிபடுகின்றனர்.

கொங்கு மண்டலம்:
கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் ஆண்டான். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலம் என்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால அமைப்புப்படி கோவை, சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன.

கொங்கு 24 நாடுகள்:

1. பூந்துறை நாடு - ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்
2. தென்கரை நாடு - தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்
3 . காங்கேய நாடு - தாராபுரம், காங்கேயம் பகுதிகள்
4 . பொங்கலூர் நாடு - பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்
5 . ஆரை நாடு - கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்
6 வாரக்கா நாடு - பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்
7 . திருஆவின் நன்குடி நாடு - பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்
8. மணநாடு - கரூர், வட்டம் தெற்கு பகுதி
9. தலையூர் நாடு - கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.
10 . தட்டயூர் நாடு - குளித்தலை வட்டம்
11 . பூவாணிய நாடு - ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்
12 . அரைய நாடு - ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.
13. ஒடுவங்கநாடு - கோபி வட்டம்
14 . வடகரைநாடு - பாவனி வட்டம்
15 . கிழங்கு நாடு - கரூர், குளித்தலை வட்டம்
16 . நல்லுருக்கா நாடு - உடுமலைப்பேட்டை
17 . வாழவந்தி நாடு - நாமக்கல் வட பாகம் , கரூர்
18 . அண்ட நாடு - பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி
19 . வெங்கால நாடு - கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி
20 . காவழக்கால நாடு - பொள்ளாச்சி வட்டம்
21 . ஆனைமலை நாடு - பொள்ளாச்சி தென்மேற்கு
22 . இராசிபுர நாடு - சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23 . கஞ்சிக் கோயில் நாடு - கோபி, பவானிப் பகுதி
24 . குறும்பு நாடு - ஈரோடுப் பகுதி

மலைகளும் கோட்டைகளும் :

1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை
2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,
பாலமலை, பெருமாள் மலை 3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை
4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை
5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை
6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை
7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை
8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்
9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை
10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை
11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு
12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை
13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி
14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை
15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை
16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.
கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி, சங்ககிரி - 1500 அடி, சதுரகிரி - 3048 அடி, கனககிரி - 3423 அடி, மகாராசக்கடை - 3383 அடி, தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி. இரத்தினகிரி - 2800 அடி, சூலகிரி - 2981 அடி, ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம்.

14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.

நதிகளும், தலங்களும்:
கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து,சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. சரவண பவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆனு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு. திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம். அவிநாசி,நாமக்கல், பவானி,வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல்,திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். `கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்` என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்.

கொங்கு நாட்டை ஆண்டவர்கள்:
கரிகால சோழன் காலம் கி.மு 60 - 10 ஆகும் என்பர். இவனைப் பாடியவர்கள் கிளாத்தலையார், பரணர், கபிலர் என்பவர்களாம். இவன் வெண்ணிப் போரில் சேரனையும், பாண்டிய மன்னனையும் கொங்கு நாட்டு 11 வேளிர்களையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். கொங்கு நாட்டை நாடாக்கியவன் இவன். இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வெள் மகளை மணந்தான். கரிகாலன் பிறந்தான் . கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். இருங்கோவேள் என்ற கொங்கு நாட்டு வெளிர் அரசனை அடக்கி வைத்தான்.

கொங்கு நாட்டைக் காடு கெடுத்து நாடக்கினான். கொங்கு வேளாளர்களைத் தொண்டை நாட்டு 24 கோட்டங்களில் குடியேற்றினான் . இவனால் குடியேற்றப்பட்டவர்கள் தான் தஞ்சைக்குச் சென்று தாராபுரம் குடிபுகுந்தனர்.


சேரன் செங்குட்டுவன் கொங்கு நாட்டை ஆண்ட பேரரசன். இவனது ஆட்சிக்காலம் - கி.பி. 150 - 205 . இவனைச்சிலம்பில் இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கின்றார். கொல்லிமலை கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகும். சோழ நாட்டின் வடமேற்கு எல்லையாகும். இந்தக் காலத்தில் தான் வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன் கொல்லி மலையை மீட்டுத் தனியாக ஆட்சி புரிந்தான். அதியமானும், தனியாட்சி செய்தான். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி மாநகர் கரூரும் தலைநகராக ஆக்கப்பட்டது.


செல்வக் கருங்கோ வாழியாதன்,பெருஞ்செரலிரும்பொறை, இளஞ்செரலிரும்பொறை, மாந்தரஞ்செரலிரும்பொறை ஆகியோர் இத்தலைநகரிலிருந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள். பெருஞ்செரலும், இளஞ்செரலும், நாமக்கல் வேட்டாம் பாடியில் பாசறை அமைத்துத் தங்கினர். நாமக்கல் கொங்கு வேளாளர் பிட்டன்கொற்றனை , படைத்தலைவனாக வைத்திருந்தனர். கி.பி 130 - 180 இல் இவர்கள் கொங்கு நாட்டை ஆண்டனர். காரியுடன் சேர்ந்து முதலில் ஓரியைக் கொன்றனர். பின் அதியமானையும் கொன்றனர். கொல்லி மலை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால் பிட்டன் கொற்றனிடம் கொல்லி மலையை ஒப்படைத்தனர்.

செங்கணான் கி.பி. 250 இல் சோழநாட்டை ஆண்டான். இவன் கொங்கர்களையும் வஞ்சிக் கோவையும் வென்றான் என்று சோழர் வரலாறு கூறும். இந்தக் கொங்கர்கள் கொங்கு நாட்டு வேளாளர்களே, சுந்தரர் செங்கணானை உலகமாண்ட தென்னாடன் குடகொங்கச் சோழன் என்று புகழ்ந்தார். மகேந்திர வர்மனும், அவன் மகள் நரசிம்ம வர்மனும் கொங்கு நாட்டு தழுவி ஆட்சி செய்தனர். நாமக்கல் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், நரசிம்மர் குடவரைக் கோயில் ஆகியவைகளை அமைத்தனர். ஆஞ்சநேயர் சிலையும் நரசிம்மன் காலத்தில் செய்யப்பட்டது. குணசீலன் நரசிம்மன் மைத்துனன் இதனைச் செய்தான்.

கி.பி. 800 இல் ஆதித்தசோழன் தஞ்சையில் முடிசூடிக்கொண்டான். கொங்கு நாட்டு ஆட்சியை மேற்கொண்டிருந்தான். கொங்கு நாட்டைப் பாண்டியனிடமிருந்து மீட்டான். கொங்குவேளாளர் இனத்தைச் சார்ந்த விக்கியண்ணன் இவனது படைத்தலைவன். இவனது மனைவிதான் கடம்பமாதேவி. இவனுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை ஆகியவற்றைப் பெரும் உரிமையும் நல்கியிருந்தான். செம்பியன் தமிழ்வேள் என்ற பட்டமும் கொடுத்தான். கி.பி. 1033 இல் இராசேந்திர சோழன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. இதனை கொங்க மண்டலம் எனப்பிரித்தான் என்று சோழர் வரலாறு கூறும்.

முதல் ராசராசன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. கொல்லிமலைக் கற்களைக் கொண்டுதான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். இவன் கி.பி.12 .8 .51 மூன்றாம் ராசராசனும் கொங்கு நாட்டை ஆண்டார்கள். இவன் காலத்தில் கொல்லிமலை நாடு அடங்கிய கொங்கு நாடு இவனது ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப்பெரரசும் 13 , 16 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களும் கொங்கு நாட்டை ஆண்டனர் . இதன்பின் முகமதியர் ஆட்சியும், ஆங்கில ஆட்சியும் வந்தது.

விஜய நகரப் பேரரசுக் காலத்தில் சாலிவாகன சகாப்தம் கி.பி 1443 இல் இராமதேவராயர் கொங்கு நாட்டை ஆண்டான் . மதுரைவரையிலும் இவன் ஆட்சி இருந்தது . திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு . சேந்த மங்கலம் , தாரமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பக் கோயில் மண்டபங்கள் கட்டப்பட்டன .இவன் கிருஷ்ணதேவராயர் மரபில் வந்தவன் . உலகப்புகழ் பெற்ற சிற்ப மண்டபங்கள் இவைகள் .எனவே கொங்குநாட்டிற்குச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறிகிறோம் . கொங்குநாடும் கொங்கு வேளாளர்களும் தொன்மையான வரலாற்றிற்கும் , பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்பதை அறிகிறோம் பதிற்றுப்பத்து அகம் ,புறம் ஆகிய சங்க இலக்கியங்கள் சங்ககாலக் கொங்கு வேளாளர் தம்வரலாற்றைக் கூறுகின்றன என்பதை அறிகிறோம்.


கொங்குநாடு எல்லையும் இருப்பிடமும் :
கொங்குநாடு தமிழகத்தின் வடமேற்கு பகுதியாகும் . இதன் எல்லையை அளவிட்டுக் கொங்குமண்டல சதகம் விரிவாகக்கூறும். அதன் விளக்கத்தை அறிவோம் . "வடக்கு பெரும்பாலை ,வைகாபவூர் தெற்கு , குடக்கு பொருப்பு வெள்ளிக் குன்று கிடக்கும் களித்தண்டலை மேவு காவிரி சூழ் நாட்டுக் குளிதண்டளையளவு கொங்கு "என்பது பாடல். கொங்கு நாட்டின் கிழக்கு எல்லை கொல்லிமலையும் , சேர்வராயன் மலையும் ஆகும். கொல்லிமலை சோழநாட்டின் எல்லையாக இருந்தாலும் , சேர நாட்டைச் சேர்ந்தது .தெங்கு வைகா ஊர், பழனிமலை , ஆனைமலை, வராகி மலையாகும். மேற்கு எல்லை நீலகிரி மலைத்தொடர், வெள்ளிமலை ஆகியவாகும் . வடக்கு எல்லை தலைமலை , பர்கூர் , தோப்பூர் மலைத் தொடர்களாம். கொங்கு நாட்டின் முக்கிய ஆறுகள் பவானி, நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு ஆகியனவாம்.
கொங்குநாட்டின் குடிமக்கள் :
சங்க காலத்தில் கொங்கு நாட்டின் குடிகள் வேளிர், பூழியர், மழவர், வேடர் ஆகியோர்களாம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தாம் வெளீர் எனப்பட்டனர். கிழார் என்பவர்களும் இவர்களே ,பூழியர்கள் இடைக்குலமக்கள் ,மழவர்கள் வீரமிக்கவர்கள் ஓரியின் இனத்தவர்கள் வேடர்கள் வேட்டை ஆடுவோர் . கொங்கு மண்டல சதகம் 18 வகைக் குடியினரைப் பற்றிக் கூறுகின்றது .கொங்கு வேளாளர், வேட்டுவர் , நாவிதர் , செட்டியார் , முதலியார், சாணார், புலவர், தச்சர், குயவன், பண்டாரம், வண்ணான், சிவியர், ஓவியர், தட்டார், இடையன், கன்னார், கொல்லன், மலைக்காரர், வலையன் என்பவர்கள் ஆவர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் முதற்குடிமக்கள். இவர்களுக்கு மட்டுமே கொங்கு என்ற மொழி இன்றும் நிலைத்து இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------

ஈஞ்சன் குல-ஈங்கூர் குல (காணி) தெய்வம்
******************
மூலவர்: தம்பிராட்டியம்மன்

பழமை:500-1000 110வருடங்களுக்கு முன்

ஊர்: ஈங்கூர், ஈரோடு மாவட்டம், கொங்கு நாடு.

தல வரலாறு:

கொங்கு வேளாள கவுண்டர்களில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் தெய்வமாக இவள் விளங்குகிறாள். ஈங்கூரில் காவிலுவர், சிங்களவர், மாவிலுவர், பூவிலுவர், வெள்ளை வேட்டுவன் ஆகிய இனத்தவர் வசித்து வந்தனர். அப்போது இவ்வூர் சோழ ஆட்சியின் கீழ் இருந்தது.

இந்த இனத்தவர்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் சோழ மன்னருக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்தனர். அவர்களை சமாளிக்க வழியில்லாமல் தவித்த சோழன், நான்கு இனத்தவர்களையும் அடக்குபவர்களுக்கு காணி நிலம் கொடுப்பதாக அறிவித்தான்.

தஞ்சையில் வசித்து வந்த ஈஞ்சன் குலத்தவர்கள் ரகுநாதசிங்கய்ய கவுண்டர் என்பவரை தளபதியாக கொண்டு அவர்களை அடக்கினர். இதற்கு பிரதிபலனாக ஈஞ்சன் குலத்தினர் 88 ஊர்களை காணியாக பெற்றனர்.

ஈங்கூரில் வந்து குடியேறிய ஈஞ்சன் குலத்தினருக்கு, மூவேந்தர்களின் எல்லையாக திகழ்ந்த மாயனூர் அருகே மதுக்கரையில் அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் குல தெய்வமாக விளங்கினார். செல்லாண்டியம்மன் அடுத்து பெருமாளை தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கினர்.

ஆண்டுதோறும் பெருமாளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் வழக்கத்தை ஈஞ்சன் குல மக்கள் கடைபிடித்தனர். ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்லும் போது இடையில் இளைப்பாறி செல்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தனர். அப்போது, நிதிக்காப்பாளராக செயல்பட்ட பெரியவர், இளைப்பாறிய இடத்திலேயே பணமுடிப்பை மறந்து வைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தார்.

பல மைல்கள் நடந்து சென்ற பிறகு பணமுடிப்பு இல்லாததை உணர்ந்த ஈஞ்சன் குல மக்கள், முடிப்பைத் தேடி வந்த வழியே திரும்பி சென்றனர். கடைசியாக தங்கிய இடத்தில் பணமுடிப்பு அப்படியே இருப்பதை கண்டு ஈஞ்சன் குலத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

பணமுடிப்பு அருகில் சென்று பார்த்தபோது அதில் நாகப்பாம்பு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்தது. இந்த பணமுடிப்பை காவல் காக்க தங்கள் குலத் தெய்வமான செல்லாண்டியம்மனே நாகமாக வந்தாள் என அவர்கள் எண்ணினர். தங்கள் குல அன்னைக்கு நாள்தோறும் பூஜை செய்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதுக்கரை செல்லாண்டியம்மனை, ஈங்கூரில் தம்பிராட்டி அம்மனாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். காவல்தெய்வமாக இருந்து ஊரை காத்து வருகிறாள்.

திருவிழா:

கார்த்திகை மாத கடைசியில் பத்துநாள் விழா நடக்கிறது.

முகவரி: அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில் ஈங்கூர்- 638058 ஈரோடு மாவட்டம்.

ஈரோட்டிலிருந்து பெருந்துறை வழியாக சென்னிமலை செல்லும் ரோட்டில் சென்றால், ஐந்தாவது கிலோ மீட்டரில் ஈங்கூரை அடையலாம்.

===================================================



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None