Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

அறிஞர் அண்ணா.

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Nov 04, 2013 8:13 pm

 
[You must be registered and logged in to see this image.]

தமிழ்க்கூறும் நல்லுலகம் "அறிஞர் அண்ணா" என்று அன்பொழுக அழைக்கும், காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் நல்ல தமிழ் அறிஞராக விளங்கினார்.
தமிழ்த்தாயின் தலைமக்களுள் ஒருவரகாவும் தமிழினத்தின் தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டியவர் அண்ணா.
தமிழ் மொழி – தமிழ் இனம் – என்று சிந்தனை – சொல் – செயல் என மூவகையாலும் எந்நேரமும் தமிழ்! தமிழ்! என வாழ்ந்திட்டவர் அண்ணா.

அண்ணாவின் வரலாறு


அறிஞர் அண்ணா 15.09.1909ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம் கொண்ட அண்ணா அரசியல், பொருளியல் என இரு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தம்முடைய தமிழ் அறிவினாலும் பேச்சு ஆற்றலினாலும் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர். ஆங்கிலத்திலும் அண்ணா பெரும் புலமை பெற்று விளங்கினார். 'யேல்' பல்கலைக்கழகம் இவருக்குச் 'சப்பெல்லோ சிப்' எனப்படும் உயரிய அறிஞருக்குரிய பட்டத்தை அளித்துச் சிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968ஆம் ஆண்டில் அண்ணாவுக்கு இலக்கிய முனைவர் (Doctor of Literature) பட்டத்தை வழங்கி அணி சேர்த்தது.

1967இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் ஆறாவது முதல்வராக அரியணையில் அமர்ந்தார் அண்ணா. தம்முடைய நேர்மைத் திறத்தாலும் கொள்கை உரத்தாலும் 'தென்னாட்டுக் காந்தி' என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப்போட்டார்; அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக்காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்படுத்திய ஆட்சியை வழங்கினார்.


பேச்சாற்றல்


தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.


மொழிப்புலமை


ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,

"No sentence can begin with because because, because is a conjunction."

எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தை ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."
என்று உடனே பதிலளித்தார்.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.


ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா


கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.


கடமை


தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற கால கட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தசலம் கூட்டத்தை முடித்து விட்டு திரும்பிகொண்டிருந்தார்...

வழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வருவாய் அலுவலர் கரோட்டியிடம் கார் டிக்கியை திறந்து காட்டு என்றார். அவரும் கார் டிக்கியை திறந்து காட்டினார். டிக்கி முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப்பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வண்டியில் வந்தது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று," தெரியாமல் நடந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள் " என்றார் ..

ஆனால் அண்ணா அவர் உதவியாளரிடம் " இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள் "என்றார். அந்த அலுவலர் தனக்கு எதோ நடந்து விடப்போகிறது என பயந்து அழாத குறையாக கெஞ்சினார். உடனே,அண்ணா நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அதிகாரியின் கையில் தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப்பார்த்தேன். உங்களைப்போன்றவர்கள் தான் உயர் பதவிக்கு வரவேண்டும் ..அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன் , என்றார் ..அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது...

இப்போது உள்ள காலமாய் இருந்தால் என்ன நடக்கும்...???????


அண்ணாவின் பொன்மொழிகள்


இப்படியெல்லாம் பெருஞ்சிறப்புகளைக் கொண்ட அண்ணா அவர்களின் திருவாய்மொழிகள் புகழ்பெற்ற பொன்மொழிகளாக இன்றும் நிலைபெற்றுள்ளன. அவற்றுள் சில:-

1.கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு

2.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு


3.கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.
வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.


4.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.


5.சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு


6.மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை;
தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை;
தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.

7.அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை.
அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.


8.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே
புது முறுக்கு ஏற்படும்.


9. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.


10.இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.


11.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.


அண்ணாவின் மறைவு


அறிஞர் அண்ணா வாழ்ந்தது அறுபது ஆண்டுகள்தாம் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவராக விளங்கினார். 03.02.1969ஆம் நாளன்று அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தது தமிக்கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்யவியலாத மாபெரும் இழப்பாகும். அவரின் இழப்பை எண்ணி தமிழகமே அழுதது. அப்போது மலேசியாவில் மாபெரும் இரங்கல் கூட்டங்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டது. பேரா மமநிலத்தில் நடந்த ஒரு இரங்கல் கூட்டத்தில் மலேசியப் பாவலரேறு சா.சி.சு.குறிஞ்சிக்குமரனார் இரங்கற்பா வாசித்தார். அவரால் முழுமையாகப் படிக்க முடியவில்லை. கட்டுக்கடங்காத அழுகையும் கண்ணீரும் அவரை கட்டிப்போட்டன. அவரைக் கண்ட கூட்டத்தினர் அனைவரும் தேம்பித் தேம்பி அழுதனர். அண்ணாவின் மறைவில் மலேசியத் தமிழரின் வாழ்வும் ஒருகணம் இருண்டு போனது.


நினைவுச் சின்னங்கள்


தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.[36]. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None