Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

"வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதல் வீரமுழக்கமிட்ட தமிழன் !

Message (Page 1 of 1)

#1

Owner

avatar
 
Administrator
Administrator

Posted Sat Oct 19, 2013 1:56 am

 
பூலித்தேவன் (1715 - 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக் காரராவார். இந்தியவிடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீரமுழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற் கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். விடுதலைப் போராட்டத்தில் 1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலே யரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். 1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங் களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டான் செவ்வல் பாளையம் ஆகும்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப் பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். பூலித்தேவர்என்றும் புலித்தேவர்என்றும் அழைக்கலாயினர சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோயில்) உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிர மணியபிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள்வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீர விளையாட்டுக்களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது.

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இத்கு சூழ் நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர். பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது.

பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது. மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச்செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர் க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள். இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதியபடையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர்.

இந்த பூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான். 1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர் களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித் தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன.

பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன்முதலாக உடைப்பு ஏற்படுத்தப் பட்டது. அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங் களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச்சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார்.

1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர். பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது .

(நன்றி : சாமி | ஈகரை )





Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None