Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Nov 04, 2013 8:39 pm

 
நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த
மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None