Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
You are not connected. Please login or register

 
 

பூமாலை.

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted on Fri Oct 25, 2013 11:49 pm

 
[You must be registered and logged in to see this image.]

அன்புள்ள ரம்யா,

உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காகஇல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.
கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ”எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ” என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை.

உனக்கு நான்கு வயதாகும்வரை உன் அம்மா உயிரோடு இருந்தாள். ”என் பட்டுச்சுட்டி! என் செல்லக்குட்டி!” என்றெல்லாம் கொஞ்சி உன் உள்ளங்கையில் அவள் முத்தமிடுவது ஏதோ கனவுபோல் உனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்தக் கையில் சித்தி சூடு போட்டாள் என்ற நினைவு தகிக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை உன்னைச் சீராட்டிச் செல்லம் கொடுத்து உன் சுருள் முடியைச் சீவிக் கிருஷ்ணன் கொண்டை போட்டு அழகு பார்த்திருந்த அதே சித்தி, தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு உன்னை வெறுத்துத் துன்புறுத்தலானாள் என்ற நினைவு அதை விட அதிகமாய்த் தகிக்கிறது.

அப்புறம் உன் கணவன்.

கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் உன் தர்க்கப் புலமையைக் கண்டு பிரமித்து உன்னை மணக்க விரும்பியவர். அவர் பெற்றோர் உன்னைப் பார்க்க வந்தபோது உன் சித்தி பேசியதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாய்.

"ரம்யாவையா பிடிச்சிருக்காம் உங்க பையனுக்கு? நிச்சயமாய் இந்த வீட்டு ரம்யாதானா?”

"ஆமாம்”

"அவ அவ்வளவு சேப்பு கூட இல்லையே? கிட்டத்திலேர்ந்து பார்த்தாரா?”

"அவ மேடைப் பேச்சில் அறிவு ததும் பித்தாம்..”

"குடித்தனம் பண்ணப் போற பெண்ணுக்கு எதுக்கு அறிவும் பேச்சும்? எதிர்த்து வாயாடவா?”

"ஏன் பார்க்கவும்தான் அழகாயிருக்கா!”

"அதுசரி. கழுதைகூட பருவத்தில் அழகாய்த் தானிருக்கும்…”

இது எதுவும் உன் நினைவிலிருந்து இன்றும் அழியவில்லை. இதுபோல் எத்தனையோ குரூரங்களைச் சித்தியிடம் சந்தித்து நீ உணர்ந்த நோவும் அவமானமும் கோபமும் இன்னும் மறக்கவில்லை. ஐம்பது வயதாகிறது உனக்கு!

நான்கு மாதங்கள் முன்பு நீ அரை நூற்றாண்டு முடித்த போது உன் கணவர் உனக்கு மல்லி மொக்கு டிஸைன் தங்க நெக்லஸ் வாங்கிப் பரிசளித்தார்.

"உனக்கும் நாட்டுக்கும் பிறந்தநாள் பொன்விழா. என் ரம்யாதேவிக்கு அன்பான வாழ்த்துக்கள்!”

அவர் முகத்தில் மலர்ச்சி. பல ஆண்டுகள் முன்பு முதல் முதலில் உன்னைக் கண்டு விரித்திருந்த அதே லயிப்பு. நீ முகம் சுளித்தாய். எனக்கு எழுதியிருக்கிறாய்.

"ஆமாம். தங்க நகை பரிசளித்தால் ஏமாந்துவிடுவேனாக்கும்! பொன்விழா அது இது என்று அலங்காரமாய் பேசிவிட்டால் போதுமா? பேச்சில் இருக்கும் அன்பு மனசில் இருக்க வேணாமா? கண்தான் அலைகிறதே?”

அவர் மனசில் என்ன இருக்கிறதோ என்னமோ, உன் மனசில் ஊட்டி இன்னும் இருக்கிறது.

அப்போது உனக்கு இருபத்தைந்து வயது. நளினி மூன்று வயதுக் குழந்தை. உன் மடியில் நளினி. சுற்றிலும் உதக மண்டலத்தின் குளிர்ச்சி. தொலைவில் வானத்துக்கு அவாவுறும் யூகலிப்ட்ஸ் மரங்கள். பொட்டானிகல் கார்டனில் இருக்கிறாய். பூக்களஞ்சியத்தின் வர்ணக் கோலாகலம். டேலியா, பிட்டூனியா, கிளாடியோலஸ், சாமந்தி, ரோஜா, லார்க்ஸ்பர், பெயர்களை அடுக்குவதால் இன்பம் கூடுமா என்ன? இன்பம் ஒரு பரிபூரணம். கூடுவதோ குறைவதோ அதற்கில்லை. மேடுகளின் உச்சியிலுள்ள மரங்களின் இலைப் பின்னல் வெப்பத்தை வடிக்கட்டித் தணித்துத் தரும் மிருதுவான சூரிய ஒளி, சரிவுகளில் சறுக்கி விளையாடும் பட்டுக் குழந்தைகள். வண்ண வண்ண ஸ்வெட்டர்களுள் ரோஜாக் கன்னங்கள் குலுங்கப் பந்துகளாய் உருண்டு வரும் உற்சாக ஒளிக் குவியல்கள். அவர்களின் கலீர் கலீரென்ற சிரிப்பு.

நீ அழகின் நடுவில் அமர்ந்திருந்தாய். பிக்னிக் கூடையை திறந்து ·ப்ளாஸ்கிலிருந்து சூடான, மணமிக்க தேநீரை ஒரு கப்பில் வார்த்து உன்னிடம் புன்னகையோடு நீட்டினார் உன் கணவர்.

"களைப்பாத் தெரியறே ரமி. ஸ்நாக்ஸ் அப்புறம் சாப்பிடலாம். முதல்ல டீயைக் குடி.”

நீ கையை நீட்டினாய். உன்னை நோக்கியிருந்த அவர் விழிகள் கணநேரம் அசைந்தன. எங்கே பார்க்கிறார்? நீயும் தலையை லேசாய்த் திருப்ப, கண்ணைக் கட்டி நிறுத்தும் ஒரு வடிவம். பச்சை நிறச் சேலையில் அழகின் பூர்ண அருள் பெற்ற உருவம். கூந்தல் மல்லிகையைவிட வெள்ளையாய்ப் புன்னகை. உடனிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைவில் பேச்சு கேட்க வில்லை. ஆனால் இவள் பேசினால், அந்தப் பேச்சும் அழகாய்த்தானிருக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் தோற்றம்.

உன் முகத்தில் மலர்ச்சி மறைந்து சுருசுருவென்று கோபம் ஏறியது. ”எனக்கு டீயும் வேணாம் ஒரு இழவும் வேணாம்” குழந்தையைப் பொத்தென்று தரையில் இறக்கிவிட்டு எழுந்து நடந்தாய்.

உன் மனசில் ஊட்டி இன்னும் மறையவில்லை. அதனால்தான் இப்போதுகூட உன் ஐம்பதாம் பிறந்த நாளுக்கு அவர் பரிசளிக்கும் போது ”பேச்சில் இருக்கிற அன்பு மனசில் இருக்க வேணாமா?” என்று கேட்கத் தோன்றுகிறது உனக்கு.

எப்படி அழுது தள்ளியிருக்கிறாய் இதையெல்லாம் நினைவுகூர்ந்து! ”சுவரோ டாயினும் சொல்லி அழு என்பதற்கிணங்க எழுதுகிறேன்” என்று பழமொழியை வேறு துணைக்கு அழைத்திருக்கிறாய். நான் சுவர் இல்லை ரம்யா, உன்னுள் இருக்கும் கண்ணாடி. உன்னை நீ என்னில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அழுகையெல்லாம் ஒரு பீடிகைதான், உச்ச அழுகைக்கு வருவதற்கு. சித்தியின் பிள்ளை உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு புது மனிதன் போல் தன்னை அறிமுகம் செய்து கொண்டபின்:

"அக்கா! சென்ற காலத்தில் ஏதேதோ நடந்திருக்கலாம். அது ஒன்றையும் மனசில் வைத்துக் கொள்ளாதே. என்னை மன்னித்து விடு. நான் உன் சகோதரன் என்ற உரிமையை என்னிடமிருந்து பறித்து விடாதே. அந்த உரிமையின் பேரில் உன் கருணையை எதிர்நோக்கும் தீனனாக, இந்த வேண்டுகோளை உன்முன் வைக்கிறேன்."

அம்மாவுக்குத் தீவிர இருதய நோய். சில ஆண்டுகளாகச் சிகிச்சை அளித்து வந்தும் பயனில்லை. வால்வ் கோளாறு. இனி அறுவைச் சிகிச்சை செய்வதுதான் ஒரே நம்பிக்கை என்று டாக்டர்கள் ஒன்று போல் சொல்லிவிட்டார்கள்.

"என் பொருளாதார நிலை மோசமென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் பணக்காரனுமில்லை. பட்டுப்போர்த்திய வைக்கோல் பொம்மையான மத்திய வர்க்கக் குடும்பஸ்தன். அறுதியிட்ட வருவாயில் செலவு போக சேமிப்பு அதிகமில்லை. நிச்சயமாக, தொடரும் வைத்திய செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் செழுமை இல்லை. அதற்காக விதவைத் தாயை கைவிட முடியுமா? அங்கே இங்கே கடன் வாங்கி பெரும்பாலும் பணம் புரட்டிவிட்டேன். ஆனால் சுமார் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தயவு செய்து தந்து உதவுவாயா? தொழிலதிபரான உன் கணவரின் செல்வச் செழிப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தொகை உனக்குப் பெரிசில்லை. கேட்கும் உரிமை எனக்கு இல்லை என்று நீ கருதலாம். ஆயினும் என் தாயின் உயிரைக் காப்பாற்ற – ஒரு மனித உயிரைக் காப்பாற்ற – இந்த நெருக்கடி சமயத்தில் இவ்வுதவியை நீ செய்வாயா அக்கா?”

"என்ன கொழுப்பு!” என்று நீ வெகுண்டாய், ”அக்காவாவது ஆட்டுக்குட்டியாவது! எத்தனையோ காலமாய்த் தொடர்பு விட்டுப் போன ஒருவன் இப்போது உதவி தேவைப்படுகிறதென்று உறவு கொண்டாடுகிறானா?” என்று பொங்கினாய். ”என் கணவரிடம் பணம் இருப்பது மாற்றாம் மாமியாருக்கு வைத்தியம் பார்க்கவா?” என்று நினைத்துப் பொருமினாய்.

உன்னைக் கொடுமை செய்த சித்தி சாகக் கிடக்கிறாள் என்ற எண்ணம் இனிக்கிறது. சாகட்டும் என்று வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இனிக்கிறது. பின்னே உனக்கென்ன பிரச்சினை? ”பணம் தர முடியாது” என்று தம்பிக்கு எழுதிப் போட்டுவிட்டு உன் இனிப்பான எண்ணங்களை ரசித்து கொண்டிருக்க வேண்டியதுதானே? மாறாக, வாழ்க்கையில் உனக்குள்ள குறைகளையெல்லாம் பட்டியலிட்டு, போதாதற்கு உன் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மெனோபாஸ் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் சொல்லி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ”நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்! இப்போதும் படுகிறேன். இந்நிலையில் அந்தப் பயல் வேறு பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்கிறானே! இது எனக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?” என்று தன்னிரக்கத்தில் புலம்பி, உன் மனசைக் கொட்டிக் காற்றில் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறாயே, இது ஏன்? உன் எண்ணத்தை நான் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகவா? என் ஆமோதிப்பு உனக்கு அத்தனை முக்கியமா? ஆனால் எனக்குக் குமட்டுகிறது ரம்யா? வருஷக்கணக்காய் வெறும் குப்பையாகவே மனசில் சேர்த்து வைத்திருக்கிறாயே! எப்படி இதனோடு வாழ்கிறாய்? இந்த மக்கிய நாற்றம் அருவருப்பாயில்லையா?”

கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், மனசில் எடுத்து வைத்துக் கொள்ள உனக்குப் பூக்களே கிடைக்கவில்லையா ரம்யா? அதாவது, நல்ல விஷயங்களோ இனிய நினைவுகளோ ஏதுமில்லையா?

அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.

தனக்கொரு மகன் பிறந்த பின் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தலானாள் என்பதை ஏன் நினைக்கிறாய்? தனக்கொரு மகன் பிறக்கும் வரை உன்னிடம் பாசத்தைப் பொழிந்தாள் என்பதை நினைத்துக் கொள்ளேன் இன்னொரு பூ. சித்தி உன்னை வெறுத்தாள் என்பதை விட்டுவிட்டு, அப்பாவின் அன்பு உனக்கு எப்போதும் இருந்து என்பதை மனசில் பதித்துக் கொள். குழந்தையான உன்னிடம் இரவில் வந்து உன்னைக் கையிலேந்திக் கண்ணைத் துடைத்து, ”உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி?” என்று நெஞ்சுருகப் பாடிக் கதை சொல்லிப் படுக்க வைத்துத் தட்டித் தூங்கச் செய்வாரே… அந்த நினைவை உன்னுடன் பத்திரப்படுத்திக்கொள். ஆமாம். அப்பா சித்தியின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றவில்லை என்பதை வெகு அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாயே, அப்பாவைப் பற்றிய இந்த நல்ல நினைவை ஏன் குறிப்பிடவில்லை?

உன் சித்தியின் விஷப் பேச்சால் உன் கல்யாணம் ஒன்றும் நின்று போய்விட வில்லையே! பேச்சுப் போட்டியில் உன் அறிவை வியந்தவர் இன்றுவரை உன்னிடம் அன்பு மாறாமல்தான் இருக்கிறார். அவர் கண் அழகிய பெண்ணின் பக்கமாய் அலைந்ததாம், பைத்தியமா உனக்கு? அழகை அதன் எந்த வெளிப்பாட்டிலும் ரசிப்பது என்பது மனித இயல்பு. ஊட்டியின் பசுமையான எழில் சூழலில் பச்சை ஆடையுடுத்து நின்றவள் அந்தக் கணம் அவ்விடத்தின் உயிர்நாடியாக, அதன் அழகுக்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாகத் தோன்றியிருக்கலாம். ஏன் கூடாது? உன்னிடம் அவர் அன்பின் ஆந்தரிகம் என்றாவது மாறியதுண்டா? விகல்பமில்லாத அந்தப் பார்வையால் முகம் சுளித்த நீ அதற்குப் பதில் அந்த இடத்தின் வண்ண மலர்களும் பட்டுக் குழந்தைகளும் தண்ணென்ற காற்றும் மெத்தென்ற கதிரொளியு மான அழகிய சூழ்நிலையின் இனிமையை மனசில் தேக்கியிருக்கலாமே! உன் மடியில் குழந்தையோடு நீயே அழகின் மடியில் அமர்ந்திருந்த இன்பம் உன் மனசில் புகவில்லை. தேநீர் எடுத்து நீட்டிய அவர் அக்கறை, அந்த இன்பத்தின் ஒரு பாகமாய் உனக்குத் தோன்றவில்லை. அவர் கண் அலைந்தது என்று ஒரு கசப்பைத்தான் உள்வாங்கிக் கொண்டாய்.

வேறு நினைவுகளுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் இருக்கின்றன! டை·பாய்ட் ஜுரத்தில் நீ படுத்தபோது இரவு பகல் பாராது அவர் உனக்குப் பணிவிடை செய்ததும், நீ விரும்பிக் கேட்டிருந்த புத்தகத்தைக் கொட்டும் மழையில் ஊரெல்லாம் அலைந்து தேடி எங்கோ நகர்க் கோடியில் ஒரு சிறு சந்துக்கடையில் கண்டுபிடித்து வாங்கி வந்து உன் கையில் வைத்து உன் முகம் மலர்வதைக் கண்டு பூரித்து நின்றதும்… இவை போன்ற எதுவும் உன் நினைவில் தங்கவில்லை. ஊட்டிக் கசப்பு ஒன்றைத்தான் இத்தனை ஆண்டு களும் நெஞ்சில் காப்பாற்றி வைத்திருக்கிறாய். குப்பை சேர்ப்பதில்தான் உனக்கு எத்தனை ஆசை!

உனக்கென்ன குறைச்சல் ரம்யா? வளமான வாழ்க்கை, அன்பான கணவன், எம்.எஸ்ஸி., எம்.சி.ஏ, முடித்து வெளிநாட்டில் கணிப் பொறி உயர்நிலைக் கல்வி பயிலும் அறிவுமிக்க மகள். எத்தனை பூக்கள் உனக்கு!

எனினும் நீ புலம்புகிறாய். இப்போது உன் முக்கியப் புலம்பல், உன்னைக் கொடுமை செய்த சித்தியின் வைத்தியத்துக்காக அவள் பிள்ளை உன்னிடம் பணவுதவி கேட்பது உனக்கு இழைக்கப்படும் அநீதி என்பது. அவள் உயிர் பிழைக்க நீ ஏன் உதவ வேண்டும்? அவள் செத்தால் உனக்கென்ன? சொல்லப்போனால் அது உனக்கு மகிழ்ச்சியல்லவா தரும்?

இருப்பினும், உடனடியாய்த் தம்பிக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதிப் போடாமல் என் ஆமோதிப்புக்காகக் காத்திருந்து காலம் தாழ்த்துகிறாய். அப்படியானால் உன் முடிவைப் பற்றி உனக்கே மூலையில் எங்கோ ஒரு சிறு சந்தேகம் இருக்கிறதென்று அர்த்தமா? ஆபத்து என்று கேட்கும் போது உதவ மறுத்தால் அது உனக்குள் எங்கேயோ உறுத்தும் போல் தோன்றுகிறது. அதுதானே? அவள் இறந்தால் நீ சந்தோஷப்படுவாய் என்ற நினைப்பைவிட அதிக கனமாயிருக்கிறதா இந்த உறுத்தல்?

‘இல்லை!’ என்று கூவுகிறாய். ‘பணம் அனுப்ப முடியாது என்று இப்போதே அவனுக்கு எழுதிவிடுகிறேன்’ காகிதமும் பேனாவுமாய் மேஜையடியில் உட்கார்ந்து விட்டாய். ஒரு நிமிஷம் பொறு ரம்யா. நான் சொல்லும் மிச்சத்தையும் கேட்டபிறகு எழுது. ப்ளீஸ். எனக்காக.

”சரி, சொல்லு!”

நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் வாழ்வது சுலபமான காரியமா?

”இல்லை, ஒரு போதும் இல்லை…”

கடைசி மூச்சுவரை நாம் நம்மோடு தானே வாழ்ந்தாக வேண்டும் ரம்யா?

‘ஆமாம்’.

அப்படியானால் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

‘நீ என்ன சொல்ல வருகிறாய்?’

"நீ காப்பாற்றியிருக்கக்கூடிய ஒரு மனித உயிர் உதவி கிடைக்காததால் இறந்து போயிற்று என்றால் அதன் பிறகு உன்னை உனக்குப் பிடிக்குமா? உன்னோடு நீ வாழ சகிப்பாயா?”

சிறிது நேரம் வரை உன்னிடம் பேச்சில்லை. அசைவில்லை. சுவரை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய். பிறகு பேனாவை மெல்ல மூடி வைக்கிறாய். நெற்றியில் கைபதித்து யோசனையில் ஆழ்கிறாய்.

உன்னை வெறுப்பவளுக்கு இந்த உதவியைச் செய்தாயானால் அதில் உனக்குப் பெரிய லாபம் இருக்கிறது ரம்யா. வெறுப்பு, கசப்பு என்றெல்லாம் மனசில் நீ சேர்த்து வைத்திருக்கும் குப்பை கூளங்கள் அனைத் தையும் இந்த ஒரே செயல் ஒரே வீச்சில் பெருக்கித் தள்ளித் துப்புரவாக்கிவிடும். அப்படிச் சுத்தமாகிய இடத்தில், நீ இதுவரை புறக்கணித்து வந்துள்ள நல்ல நினைவுகளை – அந்தப் பூக்களை எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை அழகான மாலையாய்த் தொடுக்கலாம். சித்திக்கு உதவி செய்வதன் மூலம் கசப்புத் தளை உடைந்து நீ பெறும் விடுதலையுணர்வு அந்தப் பூமாலையில் ஒரு பாரிஜாத மலர்போல் நடு நாயகமாய் விளங்கும். எனக்கும், குப்பையின் மக்கிய நாற்றம் நீங்கிப் பூமணம் கமழும் உன் மனசில் குடியிருப்பது கொஞ்சம் வசதியாய் இருக்கும்.

மீண்டும் பேனாவை எடுத்துத் திறக்கிறாய். மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொள்கிறாய். என்ன எழுதப் போகிறாய்? உனக்குப் பதில் சொன்னதோடு என் வேலை முடிந்தது. இனி உன் இஷ்டம். வரட்டுமா ரம்யா?[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None